Wednesday, December 7, 2016

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே தேவை.



பதிவு செய்த நேரம்:2016-12-08 07:59:32


டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே தேவை.

* மும்பை வாங்கடே மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. கடைசியாக 2013 நவம்பரில் வெஸ்ட் இண்டீசுடன் நடந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் & 126 ரன் வித்தியாசத்தில் வென்றது. அது சச்சின் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

* வாங்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்டிலும் வென்றுள்ளது. இங்கு இந்தியா 24 டெஸ்டில் 10 வெற்றி கண்டுள்ளது.

* இங்கிலாந்து அணியில் அறிமுகமாகும் கீட்டன் ஜென்னிங்ஸ், தென் ஆப்ரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்சின் மகன் ஆவார்.

* கடந்த 20 ஆண்டுகளில் வாங்கடேவில் நடந்த 9 டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் யாரும் 5+ விக்கெட் வீழ்த்தியதில்லை. ஸ்பின்னர்கள் 13 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

4வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்குகிறது: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு ஈடு கொடுக்குமா இங்கிலாந்து?




பதிவு செய்த நேரம்:2016-12-08 07:52:22


மும்பை: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன. மூன்று டெஸ்ட் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்குகிறது. பயிற்சியின்போது வலது கை சுட்டுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அஜிங்க்யா ரகானே இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டேவும் (27 வயது), காயம் காரணமாக தடுமாறி வரும் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 12 ஒருநாள், 6 சர்வதேச டி20ல் விளையாடியுள்ள பாண்டே, டெஸ்டிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடக்க வீரர் முரளி விஜய் ரன் குவிக்க முடியாமல் திணறி வருவது மட்டுமே இந்திய அணியின் ஒரே பிரச்னையாக உள்ளது. பார்திவ் பட்டேல் பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளேவின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

கோஹ்லி, புஜாரா, அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் சுழல் கூட்டணி அபாரமாகப் பந்துவீசி வருவதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் மட்டும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த இங்கிலாந்து, அடுத்து விசாகப்பட்டினம், மொகாலியில் நடந்த போட்டிகளில் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு காயம் அடைந்துள்ளதும் அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

காயத்தால் விலகியுள்ள தொடக்க வீரர் ஹசீப் ஹமீதுக்கு பதிலாக கீட்டன் ஜென்னிங்ஸ் அறிமுகமாகிறார். தொடரை வெல்ல இந்தியாவும், சமன் செய்யும் வாய்ப்பை தக்கவைக்க இங்கிலாந்தும் வரிந்துகட்டுகின்றன.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), எம்.விஜய், பார்திவ் பட்டேல், கேல்.எல்.ராகுல், புஜாரா, மணிஷ் பாண்டே, கருண் நாயர், அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அமித் மிஷ்ரா, இஷாந்த், உமேஷ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி. இங்கிலாந்து: அலஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, கீட்டன் ஜென்னிங்ஸ், ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஜேக் பால், கேரி பேலன்ஸ், கேரத் பேட்டி, ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர், லியம் டாவ்சன், பென் டக்கெட், ஸ்டீவன் பின், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.