Monday, February 26, 2018

பதற வைக்கும் வீடியோக்கள்.. சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்.. சிரியாவின் நிலை என்ன

உலக வரலாற்றில் நடந்த மோசமான தாக்குதல்- வீடியோ 


டமாஸ்கஸ்: சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த போரின் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் நிறைய படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இது இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.


 சிரியாவில் மோசமான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த குண்டுகள் எப்படி பள்ளிகள், வீடுகள் இருக்கும் பகுதியில் சரியாக எறியப்படுகிறது என்று வீடியோ வெளியாகி இருக்கிறது.



 சிரிப்பு : இந்த சிறுமியின் புகைப்படம் நேற்றில் இருந்து வைரலாக பரவி வருகிறது. இந்த குழந்தை தாய், தந்தை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் கேமரா பார்த்து சிரித்து இருக்கிறார்.

Tuesday, February 20, 2018

அஷ்ரபை இகழ்ந்த, சாதாராண அ.இ.ம.கா ஆதரவாளனின் கருத்தை தூக்கி பிடிப்பவர்கள், அஷ்ரப் மரணித்த போது வெடில் சுட்ட தவத்தை என்ன செய்வார்கள்..?



( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் றிஷாதை பற்றி இகழ்வதே சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. இகழ்வது தான் இகழ்கின்றீர்கள், கொஞ்சம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலாவது இகழ மாட்டீர்களா? இன்று மு.கா, மறைந்த மாமனிதர் அஷ்ரபின் நாமம் கொண்டு அரசியல் மாத்திரமே செய்கிறது. அவரின் கொள்கைகளோ மரித்துவிட்டட்டன. அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்களில் ஒருவரான பூமுதீன், மர்ஹூம் அஷ்ரப் பற்றி எல்லை மீறிய விமர்சனம் ஒன்றை வட்சப் ஒன்றில் செய்துள்ளார். அவரின் விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதனை அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த எவரும் போற்றவுமில்லை. அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாதாரண உறுப்பினர்களில் ஒருவர். அமைச்சர் றிஷாத் இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களின் ஆதரவு கொண்ட ஒருவர். அவர் இவர்கள் அனைவரும் தப்பு செய்யும் போது, அறிக்கை விட்டு கண்டிக்க முடியாது. தேவை என்றால் அவர்களின் தவறுகளை தனிப்பட்ட முறையில் ஒரு சிலரிடம் சுட்டிக்காட்டலாம். இதற்கெல்லாம் அமைச்சர் றிஷாதோ அகில இலங்கை மக்கள் காங்கிரசோ ஒரு போதும் பொறுப்பாகாது. 

இச் செய்தியை அமைச்சர் றிஷாதுக்கு சேறு பூசும் வகையில் பரப்பிக்கொண்டிருப்பவர்கள், பூமுதீனை அமைச்சர் றிஷாதின் ஊடக பிரிவை சேர்ந்தவராக குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. பூமுதீன் அமைச்சர் றிஷாதின் ஊடக பிரிவில் கடமையாற்றும் ஒருவரல்ல என்பது இங்கு பிரதானமாக சுட்டிக்காட்டத்தக்கது. ஓ... பூமுதீனின் கூற்றை கூட (பூமுதீன் எல்லாம் உங்களுக்கு ஒரு சாமானா? ), தூக்கிப் பிடித்து விமர்சிக்கும் அளவு, மு.கா போராளிகள் மர்ஹூம் அஷ்ரபின் மீது பற்றுக்கொண்டுள்ளீர்களா..? அஷ்ரபின் மரணத்தை வெடில் சுட்டு கொண்டாடிய தவம் தான், இன்று மு.காவின் மிக முக்கிய உறுப்பினர். இதனை அண்மையில் மு.காவின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவரான சேகு இஸ்ஸதீன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது, எங்கே உங்கள் பற்று? ஆனால், மர்ஹூம் அஷ்ரபோடு உண்மைக்கு உண்மையாக இருத்த மூத்த போராளிகளான ஹசனலி போன்றோர் கட்சிக்கு வெளியே! கட்சிக்குள் இவர்கள் இருவரும் இருந்த போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், ஹசனலியை விமர்சிக்குமளவு கட்சிக்குள் ஜனநாயகம்.  

பூமுதீன் கூறியதற்கு கிளம்பி அடிப்பது மர்ஹூம் அஷ்ரப்  மீதான பற்றாகது. அவரின் மீதான உங்கள் பற்றை பல விதங்களில் உங்களால் வெளிக்காட்ட முடியும். அவர் வழி காட்டிய பிரகாரம் கட்சியை கொண்டு செல்லல். கட்சியை அழித்து, முஸ்லிம்களை கருவறுக்க, அவரை கொலை செய்ததாக நம்பப்படும் நபர்களை கண்டறிதல்.  இன்று மு.காவானது அவர் வழி காட்டிய பிரகாரம் செல்லவில்லை. மாறாக, அவர் கேட்டிருந்த “ இக் கட்சி மக்களுக்கு பயனில்லை என்றிருந்தால், அதனை அழித்துவிடு ” என்ற பிராத்தனையின் அடிப்படையில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதுவரை மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம், அஷ்ரபின் மரணம் தொடர்பில் பேசியுள்ளாரா? எப்படி பேசுவார்?  தன் தலையில், தானே மண்ணை அள்ளிப் போடும் விதமாகவல்லவா அமைந்துவிடும். ஏன் சில்லறைத்தனமாக பற்றை வெளிக்காட்டாது, இவ்வாறு தரமிக்க வகையில் அஷ்ரப் மீதான பற்றை வெளிக்காட்ட தயங்குகிறீர்கள்?

Monday, February 19, 2018

ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்



இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி எழக்கூடிய சாத்தியமுள்ளது. இவ்வாறான இக்கட்டான சூழ் நிலைகளில், எமது முஸ்லிம் அரசியல் வாதிகள், யார் பக்கம் தாவுவார்கள் என்பது மிகப் பெரும் கேள்வியாகவும் உள்ளது. யாரும், எந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அது பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். ஏனையோர்களை விட, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாத், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் எவ்வாறான முடிவுகளை எடுப்பார்கள் என்பது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். இப்போதைய அரசியல் மாற்றத்தில், எந்தவித பாராளுமன்ற அதிகாரமுமில்லாத தே.காவின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் நேரடி தாக்கம் செலுத்தாது போனாலும், எதிர்காலத்தில் அவரது அரசியல் செயற்பாடுகள் மறைமுக மற்றும் நேரடி தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை எடுத்துக்கொண்டால், அவர் சு.கவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இலங்கை முஸ்லிம்களே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து நின்ற வேளை, அவரோடு கை கோர்த்து செயற்பட்டவர். சுதந்திர கட்சி தனி அரசை நிறுவ முயலுமாக இருந்தால், அவரின் முதற் தெரிவு சு.கவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. சு.க தனித்து ஆட்சியை அமைக்குமாக இருந்தால், முஸ்லிம் அரசியல் வாதிகளில் அதிகம் மகிழ்சியடையக் கூடிய ஒருவராகவும் இவரை நோக்கலாம். இதன் மூலம், அவரால் புதிய மற்றும் பழைய ஜனாதிபதிகளை ஒரே நேரத்தில் திருப்தி செய்துகொள்ள முடியும். தேசிய கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முயலுகையில், இவரின் முதற் தெரிவாக சு.க இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைக்க கூடிய சாதகமான நிலை இருந்தால், அவர் அதன் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் கட்சிகளின் பின்னால் இருப்பதை விட, ஆட்சியாளர்களுடனும் அதிகாரங்களுடனும் இருக்கும் தன்மை கொண்டவர். அவரின் இந்த தன்மை தான், காத்தான்குடியை அபிவிருத்தி மழையில் நனையச் செய்துள்ளது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். அவர் அவ்வாறு ஐ.தே.கவின் பக்கம் செல்லும் பட்சத்தில், அவர் இம் முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை காத்தான்குடியில் சு.காவில் எதிர்கொண்டிருப்பதால், அவரது உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். 

இன்றைய இலங்கை அரசியல் பயணித்து கொண்டிருக்கும் பாதையை அவதானிக்கையில், இலங்கை மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை நம்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பக்கம் வழி எடுக்கவே முயல்வார்கள். எதிர்காலத்தில் சு.கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் கூட முரண்பாடுகள் தோன்றலாம். சு.காவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுமாக இருந்தால், அதில் அதிக பலம் கொண்ட அணியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அணியை எவ்வித சந்தேகமுமின்று குறிப்பிடலாம். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பக்கம் செல்ல விரும்பினாலும், அவரது காத்தான்குடி உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதாவது, அவர் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலை சு.காவில் எதிர்கொண்டுள்ளதன் மூலம், அக் கட்சியிலிருந்து விலக முடியாதவாறு விலங்கிடப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றி கூறிய பல விடயங்கள், முன்னாள் அமைச்சரும் தே.காவின் தலைவருமான அதாவுல்லாஹ்வுக்கும் நன்கு பொருந்தும். அதில் முரண்பாட்டு விடயங்களாக சிலவற்றை குறிப்பிடலாம். தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற சூழ் நிலையில் அதாவுல்லாஹ்வின் ஒரே தெரிவாக சு.கவை உறுதிபட கூற முடியும். ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைத்தாலும், அவர் அக் கட்சியுடன் இணைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அரிது. இன்று பலமிக்க ராஜாவாக திகழும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை எதிர்பார்த்து, எதிரணி செயற்பாடுகளை முன்னெடுப்பார். ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டால், அவரது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என கூற முடியாது. பலராலும் செயலால் நிரூபிக்கப்பட்டுள்ள, அரசியலில் நிரந்தர பகைவனுமில்லை, நண்பனுமில்லை என்ற தத்துவத்தை இவ்விடத்தில் நினைவூட்டுவதும் பொருத்தமானது. அதற்கு அதாவுல்லாஹ் மாத்திரம் விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறார்? அதாவுல்லாஹ்வுக்கு ஏனையவர்களைப் போன்று தான் விரும்பிய கட்சிக்கு செல்வதில் எந்த வித இடர்பாடுகளுமில்லை. இம்முறை அவர் அனைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும், தனது குதிரைச் சின்னத்தில் எதிர்கொண்டுள்ளதால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. 

ஒரு வகையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் செயற்பாட்டை, நுட்பமான ஒரு அரசியல்  நகர்வாகவும் நோக்க முடியும். அவர் நினைத்திருந்தால் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சு.கவை பொறுப்பெடுத்து பிரச்சாரம் செய்திருக்க முடியும் ( இது பற்றிய விரிவான கட்டுரைகளை எதிர் வரும் கட்டுரைகளில் எதிர்பார்க்கலாம் ). இம் முறை சு.கவை பொறுப்பெடுத்திருந்தால், பெரும் பேரம் பேசும் சக்தியை பெற்றிருப்பார். அவ்வாறு செய்யாது, தனது சின்னத்திலேயே அனைத்து இடங்களிலும் களமிறங்கியமை இவ்வாறான சிந்தனைகளையும், வேறு சில சிந்தனைகளையும் அடிப்படையாக கொண்டதாகவே இருக்க வேண்டும். இங்கு தான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தவறிழைத்து கொண்டார் எனலாம். உண்மையில் காத்தாங்குடியில் சு.க பெற்றுக்கொண்ட வாக்குகள் முழுமையாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமானவை. அவர்  ஒரு சுயேட்சையிலோ அல்லது ஒரு தனி கட்சியிலோ இத் தேர்தலை எதிர்கொண்டிருந்தால், இந்த சிக்கல் நிலையை தவிர்த்திருக்கலாம். இங்கு தான் ஒரு கட்சியின் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உணர்கிறார். ஒருவர் ஒரு கட்சியுடன் நெருக்கமாக உள்ள போது, சுயேட்சையில் களமிறங்குவது, அக் கட்சி மீதான குறித்த நபரின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தும். தனக்கென்று ஒரு கட்சி இருந்தால், எனது ஊரில், எனது கட்சியில் கேட்கப்போகிறேன் என நேர்படையாக சொல்ல முடியும். இருந்தாலும், இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் முழுமையான பற்றை வெளிப்படுத்த முடியாது போயிருக்கும். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், தான் ஆதரவளிக்கும் கட்சித் தலைவருக்கு முழுமையான ஆதரவை அளிக்கும் பாணியில் செயற்படுவது யாவரும் அறிந்த விடயமே!

தற்போது அமைச்சர் றிஷாத் நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ளார். இம் முறை ஐக்கிய தேசிய கட்சி, வழமையாக முழு இலங்கையிலும், தனக்கு ஆதரவளித்துவந்த மு.காவை புறந்தள்ளி, புதிதாக அவர்களுடன் கை கோர்த்துள்ள இவரிடம், பல முஸ்லிம் பிரதேசங்களை ஒப்படைத்திருந்தது. இந்த விடயம், ஐக்கிய தேசிய கட்சியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கும் முக்கியத்துவத்தையும், இவ்விரு கட்சிகளும் பலமானதொரு பிணைப்பை கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ளச் செய்கிறது. இருந்தாலும், அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில், அவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். அவர் செய்திருந்த சேவைகளையும், அவ்வளவு இலகுவில் மறந்துவிடவும் மாட்டார். தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதான அச்சம் முஸ்லிம்களை விட்டகன்றுள்ளது. எனவே, அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியமைத்தால், எந்தவிதமான மன தர்மசங்கடங்களுமின்றி இணைந்துகொள்வார். அவருக்கு இரு பக்கமும் ஒன்று தான். இருந்தாலும், இரு கட்சிகளும் நேரடி மோதல்களில் ஈடுபட்டால், அது அமைச்சர் றிஷாதுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையாக அமையும். 

அமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன், அன்று தொடக்கம் இன்று வரை பின்னிப் பிணைந்துள்ள ஒருவர். அவர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைப்பதையே அதிகம் விரும்புவார். இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரோ அல்லது சு.கவினரோ ஆட்சியமைத்தால், அவர்களுடன் நிச்சயம் இணைந்துகொள்வார். அண்மையில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், தனது முக நூலில், அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை அ.இ.ம.கா மற்றும் மு.கா ஆகியன பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் பட்சத்தில், தங்களது பல உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளை பாதுகாக்க முடியாமல் போய் விடும். இது எதிர்காலத்தில், இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டும் பிரிந்து செல்லாமல் தடுக்கும் பெருங் காரணியாக திகழும். இவர்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியை வைத்திருந்தும், அதனை சரியான நேரத்தில் பயன்பட தவறிவிட்டார்கள் எனலாம். நடந்து முடிந்த தேர்தலை முஸ்லிம் கட்சிகள் தனித்து எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே சாதூரியமான முடிவாக அமைந்திருக்கும். இதன் காரணமாக, இவர்கள் இதன் மூலம் பெறத்தக்க பேரம் பேசும் சக்தியை குறைந்துக்கொண்டுள்ளனர் என்பதுவே கவலையான விடயமாகும். அமைச்சர் ஹக்கீம் கூறியது போன்று, அவர்கள் யானையை மரத்தில் கட்டிப் போட ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவில்லை. மாறாக, யானை மரத்தையும் மயிலையும் தனது பிடிக்குள் இருக்கிக் கொண்டுள்ளது. இதனை ஒரு சிறந்த படிப்பினையாக கொண்டு, மிக விரைவில் வரலாமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல்களில், முஸ்லிம் கட்சிகள் தனித்து களமிறங்கும் முடிவை எடுப்பதே பொருத்தமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2018.02.19

Sunday, February 11, 2018

சம்மாந்துறையில் எதிர்பாராத வெற்றி தோல்வி



என்னதான் பலரும் பல விதமான எதிர்வு கூறல்களை அமைத்திருந்தாலும், தேர்தல் முடிவுகளை பார்க்கின்ற போது பல அதிர்ச்சிகரமான முடிவுகளையும் பெறுவர். சம்மாந்துறை மொத்தமாக பத்து தொகுதிகளை கொண்டது. இதில் ஒன்று (வீரமுனை) மூன்று அங்கத்துவ வட்டாரமாகும். இதில் மூன்று அங்கத்தவர் வட்டாரம் உட்பட ஐந்து வட்டாரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசும், மூன்று வட்டாரங்களை மு.காவுன், இரண்டு வட்டாரங்களை சு.காவும் கைப்பற்றியுள்ளது. இதில் தோல்வியை தழுவியவர்களில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான முஸ்தபா லோயர் (மு.கா), றனூஸ் (மு.கா), றியால் (அ.இ.ம.கா) மற்றும் சட்டத்தரணி சஹுபீர் (மு.கா) ஆகியோரை சுட்டிக்காட்டலாம்.

முஸ்தபா லோயர் தோல்வியை தழுவுவார் என்பது, தேர்தலுக்கு முன்பே அனைவராலும் எதிர்வு கூறப்பட்டதே! பலரும் எதிர்வு கூறியபடி அது நிகழ்ந்துவிட்டது. சட்டத்தரணி சஹுபீர் மு.காவின் ஆதரவாளர்கள் நிறைந்த வட்டாரமான விளினையடி வட்டாரத்தில் களமிறக்கப்பட்டிருந்தார். இவரை வெல்ல வைப்பது, சம்மாந்துறை மு.காவின் ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் நோக்கமாக இருந்தது. இவரை எதிர்த்து அ.இ.ம.காவின் போட்டியிட்டவர் ஒரு வட்டானை. அவர் மு.காவின் பிரச்சார கூட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரிடம் சட்டத்தரணி சஹுபீர் தோல்வியுற்றது அவமானத்துக்குரியது. இருந்தாலும், இவ்வாட்டரத்தை அ.இ.ம.கா 56 வாக்குகளாலேயே வெற்றி கொண்டிருந்தது. இவரை வெல்ல வைக்கும் முயற்சியில் பா.உ உறுப்பினர் மன்சூர் அதிக பிரயத்தனங்களை எடுத்திருந்தோடு, இவரை தோல்வியடையச் செய்ய அ.இ.ம.காவின் அனைத்து பிரமுகர்களும் களமிறங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மு.கா வெற்றிகொள்ளத்தக்க வட்டாரங்களில் அனைவரும் எதிர்பார்த்த வட்டாரம், மலையடி வட்டாரமாகும். இந்த வட்டாரத்தில் மு.காவின் சார்பில் களமிறங்கிய சகோதரர் றனூஸ் வெற்றிகொள்வார் என்பது அ.இ.ம.காவினரால் கூட பேசப்பட்ட ஒரு விடயமாகும். இருந்த போதிலும், இவரை எதிர்த்து அ.இ.ம.காவில் போட்டியிட்ட சகோதரர் அஸ்வர் வெற்றிபெற்றுள்ளார். இத் தேர்தலில் சகோதரர் அஸ்வர் பெருமளவான பணத்தை செலவு செய்திருந்தார். இதனை ஈடு கொடுக்கும் பண வலிமை சகோதரர் றனூசிடம் இருந்திருக்கவில்லை.

சகோதர றனூஸ் கல்லரச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். சகோதரர் அஸ்வர் மலையடிக்கிராமத்தை சேர்ந்தவர். கல்லரைச்சலை விட மலையடிக்கிராமம் கிராமம் பெருமளவான வாக்காளரகளைக் கொண்டதாகும்.  இதுவே சகோதர் றனூசின் தோல்விக்கான காரணமாக குறிப்பிடலாம். சகோதரர் றனூஸ் 267 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.  இது வட்டார தேர்தல் முறையில் பெருமளவான எண்ணிக்கையாகும். சம்மாந்துறையின் இளம் அரசியல் வாதிகளில் ஒருவரான இவர், தன் அரசியல் வாழ்வுக்கு இதன் மூலம் ஒரு கரும்புள்ளியை வைத்துக்கொண்டார்.

இத் தேர்தலில் மல்கம்பிட்டி வட்டாரத்தில் சகோதரர் ரியால் களமிறங்கி இருந்தார். இவரை எதிர்த்து அவரது சகோதரர் நளீம் களமிறங்கியிருந்தார். இவ் வட்டாரத்தில் றியாலுக்கும் நளீமுக்குமிடையில் தேர்தல் நடைபெற்றது என்பதை விட, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  மாஹிருக்கும் ரியாலுக்கும் இடையில் தேர்தல் இடம்பெற்றது எனலாம். மு.காவின் சார்பில் நளீமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரே போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் குறித்த ஏரியாவில் அதிக சேவைகளையும் செய்திருந்தார். ரியாலின் தேர்தல் நடவடிக்கைகள் சற்று மந்தகரமான வகையில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

தைக்காப்பள்ளி வட்டாரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரும், அவரை எதிர்த்து தம்பிக்கண்டு மாஸ்டரும் போட்டியிட்டிருந்தனர். மாஹிர் அண்மையிலேயே மாகாண சபை உறுப்பினர் என்ற பெரும் பதவியில் இருந்து விலகி, தேர்தல் கேட்டிருந்த போதும், இவ்வட்டாரத்தை 171 வாக்குகளாலேயே வெற்றிகொண்டிருந்தார். இவ்வாட்டாரம் சற்று பெரிய வட்டாரமாகும். இது முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு சவாலாக அமைந்துள்ளதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாட்டாரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர், பல வீடுகளுக்கு இரு தடவைகள் கூட சென்று, வாக்கு கேட்டிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தம்பிக்கண்டு மாஸ்டர் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை. அவர் இவ்வட்டாரத்ததை மிக இலகுவாக வெற்றிகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும், தவறவிட்டுவிட்டார் என்றே கூற வேண்டும்.  இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரை மு.காவிற்குள்ளேயே தோற்கடிக்க சில சதிகள் இடம்பெற்றதாகவும் நம்பப்படுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Friday, February 9, 2018

சாந்தமான சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரசினரின் சண்டித்தனம்





( ஹபீல் எம்.சுஹைர் )

சம்மாந்துறையில் நடைபெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் படு தோல்வியில் முடிந்திருந்தது. அக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்வாரென எதிர்பார்த்திருந்த போதும், அவர் கலந்துகொண்டிருக்கவில்லை. மு.கா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு அருகாமையில் அ.இ.ம.கா ஒரு பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமையால், மு.காவின் கூட்டம் வெறிச் சோடிக் காணப்பட்டது. இதன் காரணமாகவே, அவர் வருகை தராமல் தவிர்ந்துகொண்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இருந்த போதிலும் அவர் இரவு உணவுக்காக சம்மாந்துறை வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மு.காவின் ஆதரவாளர்கள் தோல்விப்பயத்தில் அலைகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக எதனையும் செய்யவும் துணிந்துவிட்டனர்.

இன்று மு.காவின் முக்கிய அரசியல் வாதி ஒருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்களை மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலின் போது கைத் துப்பாகியுடன் மு.காவின் முக்கிய அரசியல் பிரமுகர் இருந்ததாக தாக்குதலுக்கு உட்பட்ட நபர்கள்  குறிப்பிடுகின்றனர்.  இன்று தோல்வியை தவிர்க்க மு.காவின் முக்கியஸ்தர்கள் வன்முறைகளை கையில் ஏந்தியுள்ளனர்.இம்முறை மு.காவுக்கு வாக்களிப்பதானது  சம்மாந்துறையில் காடைத் தனமான அரசியலுக்கான வித்திடலாக அமையும். அமைச்சர் ஹக்கீமும் வன்முறை கலந்த பாணியில் பல இடங்களில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் அடாவடித்தனம்



சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் அடாவடித்தனம் தொடர்ந்தேர்ச்சியாக சம்மாந்துறையில் அரங்கேறி வருகின்றது அந்த வகையில் சம்மாந்துறையில் இன்று சற்று நேரத்திற்கு முன் தைய்க்காப்பள்ளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கு  பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் தற்சமயம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக எந்தவித உரிய சிக்கிச்சையும் அளிக்கப்படாமல் ஆறாம் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ் வைத்தியசாலை நிர்வாகத்திலும் அரசியல் பின்புலத்தில் உரிய சிகிச்சை வழங்கக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இவ்வாறான அரசியல் கலாச்சாரம் எம் மண்ணில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். நல்லாட்சியும் நிறுவப்பட்ட வேண்டும்.

சம்மாந்துறை நிருபர்

Thursday, February 8, 2018

ஹக்கீம், மு.காவின் வன்னி பிரச்சாரர்களை இழிவாக நினைத்துள்ளார் ( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது ) ..!!



அமைச்சர் ஹக்கீம் மூதூரில் பேசிய பேச்சுக்களில், மடித்து கட்டிக்கு சண்டைக்கு செல்லப்போவதாக கூறிய கதை, மக்களிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதன் மூலம் மூதூரில், முழுமையாக ஒரு ரௌடியாக மாறிய அமைச்சர் ஹக்கீமை பார்க்க முடிந்தது. இதுவே அவரது அரசியல் அஸ்தமன காலத்தை மக்களுக்கு பறை சாட்டி நிற்கின்றது. இச்செயலானது, அவர் அரசியலில் மிகவும் கீழ்த்தரமான மட்டத்துக்கு இறங்கிவிட்டதை கட்டுகிறது. இது போன்று தான், அமைச்சர் றிஷாதை ஏசிப் பேசுவதற்கென்றே சிலரை மு.காவின் மேடைகளில் ஏறச் செய்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக, அமைச்சர் றிஷாதின் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பா.உ ஹுனைஸ் பாறூக், குவைதிர்கான் ஆகியோரை அவதானிக்க முடிகிறது. இவர்கள் மிகவும் மோசமான விதத்தில் அமைச்சர் றிஷாதை விமர்சிப்பார்கள்.

அமைச்சர் ஹக்கீம் மூதூரில் இப்படி கூறியிருந்தார் 

“ என்னைப் பொறுத்தமட்டில் மற்றவர் மீது அவதூறு பேசுவதற்கான கால அவகாசம் எங்களுக்கு கிடையாது. என்னைப் பொறுத்தமட்டில் மு.காவின் ஆதரவாளர்கள்.. கொஞ்ச பேரை ஏசிப்பேசுவதற்கு கொண்டு வந்திருந்தம், இறக்குமதி செய்து கொண்டந்திருந்தம். அவர்கள் அவர்கள் மாவட்டத்தில் இருந்து கொஞ்ச பேர் வந்திருந்தாங்க. அவங்க பேசுவாங்க. முடிஞ்சிடும். தலைமை எல்லா இடங்களிலும் கதைக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எங்கட அந்தஸ்துக்கு ஏற்பத்தான் சிலதை பேச  வேண்டும். ” 

முதலில் குர்ஆனையும், ஹதீதையும் யாப்பாக கொண்ட மு.காவானது ஏசிப்பெசவென கட்சிக்குள் ஆட்களை வைத்திருக்க வெட்கப்பட வேண்டும். மேலுள்ள அமைச்சர் ஹக்கீமின் பேச்சில், அவர் ஏசிப்பேச  கூட்டிக்கு வந்த நபார்களாக் முன்னாள் பா.உ ஹுனைஸ் பாறூக்கையும், குவைதிர்கானையும் தான் குறிப்பிடுகிறார் என்பது சிறு பிள்ளையும் அறிந்த விடயம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் அ.இ.ம.காவுடன் இருந்த காலப்பகுதியில் ஒரு ராஜாவாக இருந்தார். தனது கிராமத்தில் ஒரு கிராமத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவருக்கு மு.காவில் அமைச்சர் ஹக்கீம் கொடுத்துள்ள அந்தஸ்து, ஏசிப்பெசுவதற்கு பொருத்தமான ஒரு நபர். இதனை விட வேறு யாராலும் இந்தளவு அவமானப்படுத்த முடியாது.

அதில் இவ்வாறு ஏசிப்பேசுபவர்களுக்கென்று ஒரு அந்தஸ்து உள்ளது என குறிப்பிட்டு  அமைச்சர் ஹக்கீமே இவர்களை கேவலமாக பேசியுள்ளார். இவர்களை நம்பித் தான், வன்னி மாவட்டத்தில் ஓரிருவார் மு.காவுடன் உள்ளனர். அவர்களை அவமானப்படுத்துவது, வன்னி மக்களையே அவமானப்படுத்துவதற்கு ஈடாகும். இம் மாவட்டத்தில் உள்ள குவைதிர்கான் மிக மோசமாக அமைச்சர் றிஷாதை விமர்சித்து வருகிறார்கள். அவர்களால் அமைச்சர் றிஷாத் மீது முன் வைக்கப்படும் குறித்த விமர்சனங்களை அவதூறு என அமைச்சர் ஹக்கீம் தனது வாயினாலேயே இந்த வீடியோவில் குறிப்பிடுவதை அவதானிக்கலாம். அவதூறு என்பது ஒருவர் ஒரு பொய்யான குற்றச்சாட்டை இன்னுமொருவர் மீது முன் வைப்பதாகும். அமைச்சர் ஹக்கீம் தன்னை அறியாமல், தனது வாயாலே உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Wednesday, February 7, 2018

கொச்சைப்படுத்தப்பட்டது சாய்ந்தமருது மக்களின் உணர்வுகள் மாத்திரமல்ல



சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றம் கேட்டு, நடு வீதியில் கூட பல நாட்கள் இருந்துவிட்டார்கள். இப்படி ஒரு ஊரின் தாகமான தனியான உள்ளூராட்சி மன்ற விடயத்தில், அந்த மக்கள் வாக்களித்த ஒரு கட்சியின் தலைவர் மிகவும் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும். அமைச்சர் ஹக்கீமோ அது விடயத்தில் பிரதமர் ரணிலின் வாக்குறுதியை மலினப்படுத்தி, ஒரு நையாண்டிப் போக்கில் கதைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இவரின் கரிசனையற்ற செயற்பாட்டின் காரணமாகத் தான், இரு ஊர் மக்கள் தங்களுக்குள் தீராத பகையை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இது தான் ஒரு கட்சித் தலைவரின் பண்பா..?

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானதா என்பதற்கு அப்பால், அது அம் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. அதனை நையாண்டிக்குட்படுத்துவது சாய்ந்தமருது மக்களை அவமானப்படுத்துவதற்கு ஈடாகும். சாய்ந்தமருது மு.காவின் கோட்டையாகும். யார்...? என்ன செய்தாலும்...? அவர்கள் சிறிதும் அசைய மாட்டார்கள். அப்படியான மக்களின் தாகத்தை, மு.காவின் தலைமை ஒரு விளையாட்டுப் பொருளாக  கொண்டுள்ளமையானது, அத் தலைமை ஏனைய விடயங்களில், எவ்வாறு கரிசனை கொண்டு செயற்படும் என்பதை அறிந்து கொள்ளச் செய்யும். பூரணமாக தங்களை ஆதரிக்கும் மக்களின் தேவைகள் மீது கரிசனை கொள்ளாத அமைச்சர் ஹக்கீம் , ஏனைய மக்கள் விடயத்தில் எப்படி கரிசனை கொள்வார்.

அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை நையாண்டிக்குட்படுத்துவதன் மூலம், அவர் ஏனைய மக்களின் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம். காலம் பிந்திய ஞானத்தில் எந்த வித பிரயோசனமும் இல்லை. இதன் மூலம் அமைச்சர் ஹக்கீமின் வாக்குறுதிகள் தேர்தலை மையமாக கொண்டு வழங்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம். தேர்தலை மையமாக கொண்டு, வாக்குறுதி வழங்குபவர் ஒரு போதும் உண்மையான தலைவனாக இருக்க முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

தபால் மூல வாக்களிப்புக்கு பின் வந்தவரெல்லாம் ஒரு தலைவரா..?



( ஹபீல் எம்.சுஹைர் )

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மற்றவர்களுக்கு எப்படியோ, முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனை முஸ்லிம் மக்கள் நன்கு அறிந்தும் வைத்திருந்தனர். முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்த போதே, இலங்கை முஸ்லிம் மக்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவான செயற்பாட்டை அமைத்திருந்தனர்.

இலங்கை முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அரசியல் வாதிகளும் தங்களோடு இணைந்து கொள்வார்களென எதிர்பார்த்தனர். ஒரு முஸ்லிம் அரசியல் தலைமை குறைந்தது தபால் மூல வாக்களிப்புக்கு முன்பாவது தனது தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். அதனடிப்படையில் அமைச்சர் றிஷாத், தனது முடிவை தபால் மூல வாக்களிப்புக்கு முன்பே அறிவித்திருந்தார். அமைச்சர் ஹக்கீமோ எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருந்தார். 

இது பற்றி யாரவது கேட்டால், கட்சியை பாதுகாக்கவே அப்படி செய்ததாக சொல்கிறார். மக்களுக்காவே கட்சியாகும். அந்த கட்சியால் மக்களை சரியான நேரத்தில் வழி நடாத்த முடியாது என்றால், அந்த கட்சி இருப்பதை விட, இல்லாமல் இருப்பதே பொருத்தமானது. சமூக துரோகிகளையும் முஸ்லிம்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட மு.கா அரவணைத்து செல்ல வேண்டிய தேவை இல்லை. குறித்த அமைச்சர் ஹக்கீமின் நியாயத்தின் மூலம், மு.காவில் சமூக துரோகிகள் மலிந்து கிடக்கின்றமை தெளிவானது. அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவம் மிகத் தவறானது என்பதை விளங்க, இதனை விட பெரிதான ஆதாரங்கள் தேவையில்லை.

Tuesday, February 6, 2018

மில்லியனை கோடியாக்கி சம்மாந்துறை மக்களை மடையனாக்க முயற்சிக்கும் மு.கா...!



மு.காவானது கடந்த 17 வருட காலத்துக்கும் மேலாக அம்பாறை மாவட்ட ஆதிக்கத்தை, தன் கீழ் வைத்துள்ளது. இவர்கள் இக் காலப்பகுதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் பெரிதாக எதனையும் செய்யாது, தற்போது மக்களிடம் வந்து, அதனை செய்கிறோம், இதனை செய்கிறோமென கூறி வருகிறார்கள். அதில் சம்மாந்துறைக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் அபிவிருத்தியை செய்யப்போவதாக கூறி வருகிறார்கள். இதனை நேற்றைய நேத்ரா தொலைக்காட்சியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெளிவாக  குறிப்பிடுகிறார். இவர்கள் இவ்வளவு நாளும், இவ்வாறான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தால், இப்போது சொல்வதையும் நம்பலாம். இவர்கள் வாயால் வடை சுடுபவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

மு.காவின் சம்மாந்துறை தேர்தல் நடவடிக்கை குழுவானது, நாளை இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு ஒரு துண்டும் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரம் மிக வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அத் துண்டுப்பிரசுரத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் ஆயிரம் மில்லியன் ரூபாயாகும். ஆயிரம் கோடிக்கும் ஆயிரம் மில்லியனுக்கும் இடையில் பத்து மடங்கு வேறுபாடுள்ளது. இவர்களுக்கு கோடிக்கும் மில்லியனுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா அல்லது சம்மாந்துறை மக்களை மடையனாக்கும் முயற்சியா? ஒரு துண்டுப் பிரசுரத்தை பல தடவைகள் சரி பார்த்தே வெளியிடுவார்கள். அதன் போது, இதனை ஒருவராவது நிச்சயம் கண்டு பிடித்திருப்பார்கள். இவ்விதத்தில் சிந்திக்கும் போது, சம்மாந்துறை மக்களை கோடியென கூறி, வாய் பிளக்கச் செய்யும் செயற்பாடாகவே நோக்க முடிகிறது.

இப்போதெல்லாம் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். மு.காவின் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்யும் காலம் மலையேறிவிட்டது. இது தவறுதலாக போடப்பட்டுவிட்டதென கூறி, நியாயப்படுத்த முனையலாம். ஒரு துண்டுப் பிரச்சுரத்தை, சரியான பெறுமானத்தை இட்டு வெளியிட முடியாதவர்கள், பெறுமானம் தெரியாதவர்களிடம், எப்படி பிரதேச சபை ஆட்சியை வழங்க முடியும்? குறித்த செயல் மூலம் மு.கா எவ்வளவு ரூபாய் பெறுமதியான சேவை செய்யவுள்ளது என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியாது என்பது புலனாகின்றது. இது தான், அவர்களது சேவையின் செப்பமாகும். சிந்திப்போம்.. வாக்களிப்போம்...

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Monday, February 5, 2018

கட்சிக்காரர்களின் உயிரை பலி கொடுத்து, தனது காரியத்தை சாதிக்கும் மனோ நிலையில் ஹக்கீம்



கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்ற அமைச்சர் ஹக்கீமின் உரையானது வன்முறைகளை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இடையில் கட்சியைப் பாதுகாக்க, போராளிகள் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளதாக கூறி, கட்சிக்காரர்களை அதீத  உணர்ச்சியும் ஊட்டி இருந்தார். அமைச்சர் ஹக்கீம் கல்முனை மாநகர சபை தேர்தலை நடாத்தாமல் பிற்போட முயற்சிப்பதாக சில தகவல்கள் உள்ளன. அந்த நகர்வுக்கு சாய்ந்தமருதில் ஒரு பெரிய வன்முறை சம்பவம் அமைச்சர் ஹக்கீமுக்கு அவசியம். அதனை மையாமாக கொண்ட பேச்சாகவே, அதனை பார்க்க முடிவதாக பலராலும் பேசப்படுகிறது.

இவ்வாறு சிந்திக்க சில நியாயமான காரணங்களும் உள்ளன. அமைச்சர் ஹக்கீமின் பேச்சுக்கள் அனைத்தும் மிகவும் நிதானமாக அமையும். இது அனைவரும் அறிந்த விடயங்களில் ஒன்று. சாய்ந்தமருது களநிலவரம் என்ன? அங்கு எவ்வாறு, தான் பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயங்களை, அவர் ஏலவே திட்டமிட்டுக்கொண்டே, அங்கு வந்திருப்பார். சாய்ந்தமருது நிலவரம் அவர் ஏலவே அறிந்தது தான். அங்கு வந்து வன்முறைகளை இன்னும் அதிகரிக்கும் வகையில் பேசியுள்ளமையாமையானது, ஏதோ ஒன்றை சாதிக்கும் நோக்கில் தான் என்பதை யூகித்துக்கொள்ள முடிகிறது. அது வேறு எதற்காக இருக்க முடியும்?

குறித்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் கல் வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. அதாவது முன்னரே அவர்களும் தயாராகவே சென்றுள்ளனர். இவைகளையும் அமைச்சர் ஹக்கீமின் உரைகளையும் தொடர்புபடுத்தி பார்க்கின்ற போது, அவர் நன்கு திட்டமிட்டே வன் முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். தனது கட்சிக்காரர்களின்  உயிர், உடமைகள் அமைச்சர் ஹக்கீமுக்கு அரசியல் விளையாட்டுப்பொருட்கள். 

மர்ஹூம் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்த காலத்தில், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு மத்தியில் கட்சியை வளர்த்திருந்தார். அப்போது முஸ்லிம்கள் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. மாறாக, முஸ்லிம்களே முஸ்லிம்களுக்குள்  அடித்துக்கொண்டு, உயிரை போக்கிக்கொள்வதற்காகவல்ல. அதுவும் மு.காவின் அசைக்க முடியாத கோட்டையான சாய்ந்தமருதில், மு.கா கட்சி மீது நம்பிக்கை இழந்தல்ல. இதனை மு.கா கட்சிக்காரர்கள் நன்கு சிந்தித்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் ஹக்கீமின் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களுக்கு அடிபணிந்து, வன்முறைகளில் ஈடுபட்டு, தங்களது வாழ்வை அழித்துக்கொள்வதற்காகவல்ல.

அஹமட் சாஜித்
மாவடிப்பள்ளி

சாய்ந்தமருதில் வன்முறையை தூண்டும் வகையில் ஹக்கீம் பேசிய மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்



( ஹபீல் எம்.சுஹைர் )

சாய்ந்தமருது நகரானது ஒரு கலவர பூமியாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் போது பல சந்தர்ப்பங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கைதுக்கு பல வகையிலும் அமைச்சர் ஹக்கீமே காரணமானவர். அமைச்சர் ஹக்கீமுக்கு, சாய்ந்தமருது மக்களே தனித் தலைமைத்துவம் வழங்கி கெளரவித்தவர்கள். அவர்கள் அமைச்சர் ஹக்கீமிடம், அவர்களின் தேவையான பிரதேச சபை கோரிக்கையை முன் வைத்தார்கள். அவரும் பல வருடமாக தருகிறோம்.. தருகிறோம்.. என ஏமாற்றியே வந்தார்.

அந்த மக்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்போது அமைச்சர் ஹக்கீமுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனை புரிந்து கொண்டு அமைச்சர் ஹக்கீம் மிகவும் நிதானமான வகையில் தனது செயற்பாடுகளை அமைத்திருக்க வேண்டும். அவரும் அந்த மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது, ஏட்டிக்குப் போட்டியான அரசியலை செய்து கொண்டிருக்கின்றார். தற்போது இந்த போராட்டத்தை தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ஹனீபா, இப் போராடத்துக்கு முன்பு மு.காவின் தீவிர ஆதரவாளர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. 

இவ்விடயத்தை அமைச்சர் றிஷாத் கையாண்டது போன்று அமைச்சர் ஹக்கீமும் மிக நிதானமாக கையாண்டிருக்கலாம். அவ்வாறு கையாண்டிருந்தால், இந்தளவு பிரச்சினை முற்றியிருக்காது. அவர்களும் வன்முறை நோக்கிய திசையின் பக்கம் சென்றிருக்க மாட்டார்கள். இந்த வகையில் சிந்திக்கும் போது, தற்போது சாய்ந்தமருதில் நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளுக்கு அமைச்சர் ஹக்கீமின் அணுகு முறையே பிரதான காரணமாகும்.  இவரின் குறித்த செயல் மூலம் அந்த மக்களின் வாக்கு ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, இன்னும் தன் மீதான பழியை அதிகரித்துக்கொண்டுள்ளார். அந்த வகையில் அமைச்சர் றிஷாத் வயதில் சிறியவராக இருந்தாலும், அரசியல் அனுபவத்திலும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் அமைச்சர் ஹக்கீமை விட அனுபவமிக்கவர்.

அமைச்சர் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து ஒரு சண்டியன் போல (அவரது பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையுமில்லை..!), எதிரிகளை சண்டைக்கும் அழைக்கும் விதமாக பேசியிருந்தார். இதனை வீடியோ ஆதாரங்கள் மூலம் தெளிவாக நிரூபிக்க முடியும். அவரது குறித்த அந்த பேச்சுக்கள் எதிராளிகளையும் தனது கட்சிக்காரர்களையும்  வன்முறையின் பக்கம் தூண்டியிருக்கும். வன்முறை செய்வது மாத்திரம் குற்றமல்ல. வன்முறைக்கு தூண்டுவதும் குற்றமே. அந்த வகையில் அமைச்சர் ஹக்கீம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக நீதி மன்றம் செல்வதன் மூலம் செய்துகொள்ள முடியும். இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலைக்கு அமைச்சர் ஹக்கீமே பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

சாய்ந்தமருதில் சண்டித்தனம் காட்டிய சாணக்கியன்



வன்முறைகளின் பக்கம் வழி காட்டுபவன் ஒரு போதும் தலைவனாக இருக்க மாட்டான். தன்னோடு உள்ளவர்களை மிகவும் நிதானமாக வழி காட்டுபவனே உண்மையான தலைவனாவான். சாய்ந்தமருதில் மு.காவுக்கு எதிராக சில வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை மறுக்க முடியாத உண்மை. அந்த வன்முறைகளுக்கான அறைகூவலை சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் முன்னின்று செய்யவில்லை. அவர்களுடைய வழி காட்டல்கள் அனைத்தும், நிதானமான திசையின் பக்கமே அமைந்துள்ளன. சிலர் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் வன்முறைகளின் பக்கம் செல்கின்றனர். சாய்ந்தமருது பள்ளிவாயல் தலைமை முன்னின்று வன்முறைகளை முன்னெடுத்தாலோ அல்லது  வன்முறைக்கு ஒரு சிறிய தூண்டுதலை வழங்கினாலோ, அதனை தாங்கும் வலிமை மு.காவினருக்கு இல்லை என்பது வெளிப்படையான விடயம்.

நேற்று இடம்பெற்ற மு.காவின் எழுச்சி மாநாட்டில் அமைச்சர் ஹக்கீமினுடைய பேச்சுக்கள் அனைத்தும் சண்டித்தனம் நிறைந்ததாகவே அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒரு இடத்தில் தாங்கள் இவர்களை வன்முறைகளிலும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என கூறியிருந்தார். அவரது கட்சிக் காரர்கள் உயிரை கொடுக்கக் கூட தயாராகவுள்ளதாகவும் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு, அங்கிருந்த அவரது கட்சிக்காரர்களை உசுப்பேத்தி விட்டிருக்கும். அதே நேரம், சாய்ந்தமருது சுயேட்சை குழு மக்களை வெறுப்படையச் செய்து, வன்முறையின் பக்கம் செல்ல தூண்டி இருக்கும். எந்த வகையில் சிந்தித்தாலும் இவரது குறித்த கருத்து பாரிய வன்முறைகளை தோற்றுவிக்கக்கூடியது. இவர் தான், ஒரு தலைமைத்துவ பண்புள்ளவரா? இவரது பேச்சுக்கள் தனது கட்சிக்காரர்களை நிதானமாக செயற்படும் வகையில் அமைந்திருக்க வேண்டும். சுயேட்சை குழு ஆதரவாளர்களை சிந்திக்க வைத்திருக்க வேண்டும். மாறாக, வன்முறைகளை தூண்டும் வகையில் அல்ல.

மு.கா கட்சிக்காரர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். இந்த உசுப்பேத்தும் பேச்சுக்கள் மூலம் பாதிக்கப்படப் போவது யார்?  அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு படையினர், யாரையும் அமைச்சர் ஹக்கீமின் நிழலை கூட நெருங்க விட்டிருக்கமாட்டார்கள். பிரச்சினை எழுகின்ற சந்தர்ப்பத்தில் கட்சிக்காரர்களை கூட, அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு படையினர் நெருங்க விடமாட்டார்கள். அன்று அங்கு வருகை தந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் வெளியூர் மக்கள். அந்த மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டாவது, அமைச்சர் ஹக்கீம் தனது பேச்சை நிதானமான வகையில் அமைத்திருக்க வேண்டும். அது மாத்திரமல்ல, அங்கு சில பெண்கள் கூட வருகை தந்திருந்தார்கள். பெண்களையும் வைத்து கொண்டு. இன்னும் வன்முறைகளை தூண்டும் வகையில் பேச்சுக்களை அமைப்பது மிகவும் பாரதூரமானது. குறித்த இடத்தில் அமைச்சர் ஹக்கீமின் மனைவி, பிள்ளைகள் இருந்திருந்தால், இவ்வாறு பேசியிருப்பாரா? 

மு.கா எழுச்சி மாநாடென்று பெரிதாக தம்பட்டம் அடித்தாலும், அங்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தந்திருக்கவில்லை. அதற்கு பாதுகாப்பு காரணங்கள் பிரதான அமைந்திருக்கும். மு.காவின் முக்கியஸ்தர்களே அஞ்சி வர மறுத்த இடத்தில் நின்று வன்முறைகளை தூண்டும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயமாகும். இந்த இடத்துக்கு பெண்களையும் அழைத்து வந்தமை எந்தளவு தவறானது. இதனை நன்கு சிந்திக்கும் ஆதரவாளர்களால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Saturday, February 3, 2018

அமைச்சர் றிஷாதை போன்று, வேறு யாராவது வில்பத்து விடயத்தை உறுதியாக பிடித்துக்கு நிற்பார்களா?



( ஹபீல்.எம்.சுஹைர் )

இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற மிகப் பெரும் சவால்களில் ஒன்றாக வில்பத்து பிரச்சினையை சுட்டிக்காட்டலாம். அந்த பிரச்சினை அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கின்றது. அவ்வாறு எழும் போதெல்லாம், அதனை எப்படி எப்படியெல்லாம் சமாளிக்க முடியுமா, அத்தனை விதத்திலும் சமாளித்துக்கொண்டிருப்பவர் அமைச்சர் றிஷாத் மாத்திரமே. வேறு யாரையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட முடியாது. இது அந்த மக்களுக்கு மாத்திரமல்ல, இலங்கை மக்களுக்கே நன்றாக தெரியும். இதற்காக எத்தனையோ வழக்குகளை அவரது தொழில் சுமந்து வருகிறார். எதிர்வரும் ஐந்தாம் திகதி கூட, ஒரு வழக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

நன்றாக சிந்தித்து பாருங்கள்..! இது தேர்தல் காலம். இந்த காலத்தில் ஒரு அரசியல் பிரதிநிதி எவ்வாறு செயற்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அமைச்சர் றிஷாத் இலங்கை பூராகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந் நேரத்தில் இப்படியான ஒரு வழக்கை எதிர்கொள்வது மிகவும் சவாலானது. ஒரு நாள் அதற்கென்றே அவர் நேரம் செலவு செய்ய வேண்டும். இது தேர்தல் காலம் என்பதால், பல  நாட்கள் முன்பே, தான் திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்வுகள் குழம்பி போய்விடும். இது அவருக்கு பெரும் தலையிடியை வழங்கும். அவர் இந்த தலையிடியை யாருக்காக எதிர்கொள்கிறார்?

அமைச்சர் ஹக்கீம் மறைந்த தலைவர் உருவாக்கிய மு.கா என்ற மா பெரும் விருட்சகத்தின் தலைவராக உள்ளார் ( தற்போது மு.காவானது அழிவின் விளிம்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ) இவர் இதற்காக ஒரு பிரச்சினையாவது முன்னின்று எதிர்கொண்டுள்ளாரா? இவர் மீது இனவாதிகளின் ஒரு வழக்காவது உள்ளதா..? அன்று தீகாவாபி பிரச்சினை தோன்றிய போது, மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மதிப்புக்குரிய சோம தேரருடன் விவாதம் செய்தது போன்ற, எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார். அதே விதத்தில் இன்று இனவாதிகள் மூலம் தோன்றக் கூடிய பிரச்சனைகளை அமைச்சர் றிஷாதே எதிர்கொண்டு வருகிறார். இதனை நன்றாக சிந்திப்போர் அறிந்துகொள்ள முடியும். 

தற்போதெல்லாம்  பல கோணத்திலும் இலங்கை முஸ்லிம்கள், இனவாதிகளின் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால். இதனையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவராக, இன்றுள்ளவர்களில் அமைச்சர் றிஷாதை மாத்திரமே கை நீட்டிக் காட்டலாம். இதனை வைத்து சிந்திப்போர், இன்று இலங்கை முஸ்லிம்களின் தலைவராகும் தகுதியும் தேவையும் அமைச்சர் றிஷாதுக்குள்ளது.

இப்படியான மர்ஹூம் அஷ்ரபிடம் இருந்த, அமைச்சர் றிஷாதிடம் உள்ள பண்புகளை அமைச்சர் ஹக்கீமிடமெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இன்றெல்லாம் அமைச்சர் ஹக்கீம் ஒரு ஊடகத்தின் முன் நின்று, ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதில் வழங்க அஞ்சுகிறார். எந்த ஊடகத்தின் முன் செல்வதுமில்லை. இப்படியானவர் எவ்வாறு இனவாதிகளுடன் மோதுவார். இதற்குள் இவர் ஒரு சட்டத்தரணியும் கூட.  அமைச்சர் றிஷாதோ ஊடகங்களின் முன் தைரியமாக சென்று சிங்கத்தை போன்று கர்ச்சிக்கின்றார். இதுவே, மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். மர்ஹூம் அஷ்ரபை போன்று மக்களுக்காக போராடும் அமைச்சர் றிஷாதா, பிரச்சினை என்றாலே ஓடி ஒளியும் அமைச்சர் ஹக்கீமா?

முசலி பிரதேச சபையையும் தமிழர்களிடம் ஒப்படைப்பதா..?



“ இக் கட்சி, மு.கா முசலி பிரதேச சபையின் ஆட்சியை தனித்து நின்று அமைப்பது என்ற தீர்க்கமான முடிவோடு திறமையான வேட்பாளர்களை களமிறக்கியுள்ள அதே நேரம், எங்களுக்கு ஆசனங்கள் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு, ஆட்சியமைக்கும் போது கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் ஹக்கீம்  ”

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் பிரதேச சபை முசலி பிரதேச சபையாகும். இந்த முசலி பிரதேச சபையை கைப்பற்ற, மு.கா அதீத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில், மு.கா உள்ளூராட்சி மன்ற தேர்தல் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, முசலி பிரதேச சபையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அது அவர்களுக்கு கை கூடாமல் போயிருந்தமை கடந்த கால விடயங்களாகும். அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தல் கேட்டிருந்தால், மிக கேவலமான தோல்வியை தழுவி இருப்பார்கள். அங்குள்ள முஸ்லிம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு மிகக் கடுமையான வெறுப்பில் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியை நாடிச் சென்றதில் சில விடயங்கள் உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில், மு.கா வன்னி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளியை கூட நெருங்க முடியாதளவு படு தோல்வியை சந்தித்திருந்தது. இது போன்றதொரு தோல்வியை மீண்டும் சந்திக்காமல் தவிர்ப்பது அவர்களது திட்டமாக இருக்கலாம். அது மாத்திரமன்றி, இன்று மு.காவினருக்கு சவாலாக அமைச்சர் றிஷாத் உள்ளார். முசலி பிரதேச சபையானது அமைச்சர் றிஷாதின் கோட்டையாகும். அதனை வீழ்த்தினால், அமைச்சர் றிஷாதை வீழ்த்தியதுக்கு ஈடாகும். அதற்கு எதனையும் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு மு.கா சென்றுவிட்டதை அறிந்துகொள்ளலாம். அமைச்சர் றிஷாதை வீழ்த்துவதற்காக, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம்கள் கைப்பற்றக்கூடிய பிரதேச சபையான முசலி பிரதேச சபையை தமிழர்களிடம் ஒப்படைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற முசலி பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில், மு.கா முசலி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு மேலதிக ஆசனங்கள் தேவைப்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் உதவும் என அமைச்சர் ஹக்கீம் அடித்து கூறியுள்ளார் . மு.கா தனித்து ஆட்சியமைக்குமாக இருந்தால், அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களின் கையில் அச் சபை இருக்கப் போகிறது. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படுமாக இருந்தால், முதலில் முஸ்லிம்களின் கையை விட்டு, குறித்த சபை செல்லாத வகையிலேயே ஆட்சியமைத்தல் சிந்திக்கப்படல் வேண்டும். மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பிரதேச சபையையும் தமிழர்களிடம் ஒப்படைப்பது எந்தவகையிலும் ஏற்கத்தகுந்ததல்ல.

ஏன் அமைச்சர் ஹக்கீமுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உதவ வேண்டும்? அப்படியான சபை நீடிக்கின்ற காலம் முழுவதும், அச் சபை தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும். சில வேளை, அரை ஆட்சிக்கால தவிசாளர் அல்லது பிரதி தவிசாளர் பதவிகள் கூட வழங்கப்படலாம். மு.காவினர் அப்படி ஏதேனும் பதவிகள் வழங்கப்படாது என கூறலாம். இந்த பதவிகள் வழங்கப்படுவதை விட, எதுவுமே வழங்கப்படாமல் இருப்பது தான் மிகவும் ஆபத்தானது. அப்படி ஏதும் வழங்கப்படாது போனால், இதற்கு பிரதி உபகாரமாக  மு.கா செய்யப்போவது என்ன? இதற்கு முஸ்லிம்களை அடகு வைத்த வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற மிக முக்கிய விடயங்களில், மு.காவானது த.தே.கூவுக்கு விட்டுக்கொடுப்புச் செய்யலாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சபையை கூட முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து ஆட்சி செய்கிறோம் என வடக்கு, கிழக்கு இணைப்புக்கான நியாயமாக தமிழர்கள் சர்வதேசத்திடம் எடுத்துச் செல்வார்கள். இந் நேரத்தில் இவ்வாறான நியாயங்களையே அவர்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர். அழகான நியாயம் தானே! தமிழர்கள் சிறிய மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்கப் பார்க்கின்றனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சில சித்து விளையாட்டுக்களுக்கு, அமைச்சர் றிஷாத் உடன்பட்டுச் செல்பவரல்ல. இதுவே அமைச்சர் றிசாதுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் உள்ள முரண்பாடாகும். அமைச்சர் ஹக்கீமை பொறுத்த வரையில், அவர் மக்களுக்காக பெரிதும் முரண்பட விரும்பாதவர். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நெருக்கமான தொடர்பை உடையவர். இவர்களின் நெருக்கத்துக்கான காரணம் யாவரும் அறிந்ததே! இதற்கு துணை போகின்ற மு.காவை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

இதனை இவ்விடத்தில் கூறுவது, மு.கா முசலி பிரதேச சபையை கைப்பற்றுவார்கள் என்ற நோக்கில் அல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தல் போன்று, இம்முறையும் மு.காவின் நோக்கங்களை அறிந்து, முசலி பிரதேச சபையில் மு.காவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் மூலம், அம் மக்கள் ஒரு பலமான செய்தியை அமைச்சர் ஹக்கீமுக்கு சொல்ல வேண்டும் என்பதற்கேயாகும். முசலி பிரதேச சபையை கைப்பற்றுமளவு மு.காவுக்கு பலமில்லை. அமைச்சர் ஹக்கீம் தேர்தலுக்கு முன்பே, தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உதவியை நாடியிருப்பதானது அவருக்கே, தாங்கள் இத் தேர்தலில் ஆட்சியமைக்குளவு ஆசனங்களை பெறுவோம் என்றார் நம்பிக்கயின்மையை எடுத்துக் காட்டுகிறது. இம்முறை முசலி மக்கள் மு.காவுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும், முசலி பிரதேச சபையை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கு ஈடாகும். முஸ்லிம் பிரதேச சபையை தமிழர்களிடம் ஒப்பதடைப்பதா, முசலி மக்களின் கையிலேயே உள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Friday, February 2, 2018

சாய்ந்தமருதில் போராளிகளை பலிக்கடாவாக்கப்போகும் ஹக்கீம் சாய்ந்தமருது மக்களின் அடி, வாக்குகள் மூலம் அமைதல் வேண்டும்



நாளை சாய்ந்தமருதில் மு.காவின் எழுச்சி மாநாடொன்று  நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த மாநாடானது சாய்ந்தமருது மக்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகும். அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற வகையில் சாய்ந்தமருது மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மை. அமைச்சர் ஹக்கீம் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டாலே, அந்த மக்கள் வீதிகளில் கம்பு தடியுடன் வலம் வருகின்றனர். இந் நிலையில் அங்கு ஒரு எழுச்சி மாநாடொன்றை நடாத்தச் செல்வது, அவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயல் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

ஏன் அமைச்சர் ஹக்கீம் அங்கு எழுச்சி மாநாடொன்றை நடாத்த வேண்டும்? சாய்ந்தமருதில் உள்ள ஆதரவாளர்களை கொண்டு மாத்திரம் ஒரு பிரச்சார கூட்டத்தை நடத்தினால், அங்கு மு.கா பலத்த அவமானத்தை சந்திக்க நேரிடும். அது இத் தேர்தலில் ஏனைய இடங்களிலும் அதிக தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. வெளியூர் மக்களையும் அழைத்துக் கொண்டு சென்றால், மக்கள் இல்லையே என்ற அவமானத்தை தவிர்த்துக்கொள்ளலாம். இங்கு இன்னுமொரு விடயமுமுள்ளது. அமைச்சர் ஹக்கீம் தனித்துச் செல்லும் போது அந்த மக்களின் எதிர்ப்பை அவராலும், சாய்ந்தமருது போராளிகளாலும் சமாளித்துக்கொள்ள முடியாது என்பது யதார்த்தம். அதிகமான போராளிகளையும் அழைத்துச் சென்றால், அவர்கள் புதினம் பார்த்து முடிப்பதற்குள், அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிடுவார்கள். 

தலைவரை காப்பாற்ற போராளிகள் தலை கொடுப்பார்கள். இங்கு பிரச்சினைப்பட்டு மாயப்போபவர்கள் அப்பாவி போராளிகளே ! இனியென்ன அவர்கள் கோடு கேசென்று அலைவார்கள். இவர்கள் கோடியுடன் கும்மாளமடிப்பார்கள். சாய்ந்தமருதில் ஒரு குழப்பகரமான நிலை நிலவுகிறது என நன்கு அறிந்து கொண்டு போராளிகளை அழைத்துச் செல்வதைப் போன்ற ஒரு உச்ச சுய நலம் வேறு யாருக்கும் இருக்காது. அமைச்சர் ஹக்கீம் அந்த வீதியால் கூட பயணிக்க அஞ்சி சொறிக்கல்முனையால் மருதமுனை செல்கிறார். நடு நிசியில் சாய்ந்தமருதில் கள்ளக் கோழி பிடித்தார். தனது பாதுக்காப்புக்கு இத்தனையும் செய்த அமைச்சர் ஹக்கீம், இப்போது அந்த ஊருக்குள் தனது வெளியூர் ஆதரவாளர்களுடன் புகுகிறார். இதனை விட சுயநலம் இருக்க முடியுமா? தான் செல்ல அஞ்சிய இடத்துக்கு, வெளியூர் மக்களை அழைத்து செல்வது தான், ஒரு தலைவரின் வழி காட்டலா? இது தான், தங்களது தலைமையை போராளிகள் அறிந்துகொள்ள சரியான தருணமாகும்.

இருந்தாலும் இங்கு ஒரு உண்மையையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு தேவையான நேரம் சென்று வர, சாய்ந்தமருது மக்கள் அனுமதித்திருக்க வேண்டும். அது ஒரு வேட்பாளரினுடைய, தேர்தல் கேட்கும் கட்சியினுடைய  உரிமை. இந்த உரிமையை யாரும் தடை செய்வது சட்டப்படி குற்றமெனலாம். அவர் தனது பக்க நியாயத்தை கூறும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவரது நியாயங்களை ஏற்குமளவு சாய்ந்தமருதில் ஏமாளிகள் இருக்க மாட்டார்கள். அவர் தானாக அவமானப்பட்டு சென்றிருப்பார். இப்படி ஒரு எழுச்சி மாநாடொன்றை நாடாத்தும் சிந்தனை கூட எழுந்திருக்காது.

சாய்ந்தமருது மக்கள் போராட்டம் ஏனையவற்றை போன்ற ஒரு போராட்டமாக நோக்க முடியாது. அது ஏனைய ஊர்களும் முன் மாதிரியாக கொள்ளத்தக்க, பள்ளிவாயல் தலைமையால் வழி நடாத்தப்படுகின்ற ஒரு போராட்டமாகும். ஒரு பள்ளிவாயல் போராட்டத்தை முன்னின்று நடாத்துகின்ற போது, அதற்கென்று தனித்துவமான பண்புகள் இருந்தாக வேண்டும். அதில் வன் முறைகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும். சாய்ந்தமருதில் வன்முறையற்ற போராட்ட சிந்தனை ஆரம்பத்தில் தவிர்க்கப்பட்டிருந்தால், இதனைப் போன்ற ஒரு முன் மாதிரியான போராட்டம் வேறு எங்கும் இருக்காது.

இதுவரை இடம்பெற்ற  வன்முறைகளுக்கு பள்ளிவாயல் தலைமைகளை குறை கூற முடியாது. குறித்த வன்முறைகளில் ஈடுபட்டோரே காரணமானவர்கள். அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்லும் முயற்சிகளை சரியான விதத்தில் செய்யவில்லை என்பதே, பள்ளிவாயல் தலைமைகள் மீதான குற்றச் சாட்டாகும். மக்களின் உணர்ச்சிகளை இலகுவில் கட்டுப்படுத்தவும் முடியாது. நாளை எந்த விதமான சர்ச்சைகளும் இடம்பெறாத வகையில் பள்ளிவாயல் தலைமைகள் மிக நேர்த்தியான வழி காட்டல்களை மேற்கொள்ள வேண்டும். எதிர்ப்பை காட்டுவதென்றால் ஆயிரம் வழிகளை கையாளலாம். அமைச்சர் ஹக்கீமுக்கு வாக்குகள் மூலம் அடிக்கும் அடியை தவிர வேறு எந்த அடியும் அந்தளவு வலிக்காது. அதே நேரம் நாளை மு.காவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றால், அதை வைத்து மு.காவின் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிப்பது எதிர்காலத்தில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இன்று குறித்த கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் விஜயம் செய்துள்ளார். எந்தவிதமான சல சலப்புக்களும் இடம்பெறவில்லை. இதே நிலை நாளை தொடரும் என்றே நம்பப்படுகிறது. சாய்ந்தமருதில் பதட்ட நிலையை ஏற்படுத்த முனையும் அமைச்சர் ஹக்கீமின் தந்திரத்துக்குள் சாய்ந்தமருது மக்கள் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது. 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.