Wednesday, October 25, 2017

சம்மாந்துறையை  இரு சபைகளாக பிரிக்கும் கோரிக்கை, சம்மாந்துறை மக்களால் எப்போது முன் வைக்கப்பட்டதென பா.உ மன்சூர் கூற வேண்டும்




பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயற்றும் முயற்சிகளை செய்து வருவதை யாராலும்  மறுக்க முடியாது. இது போன்று பல தரப்புக்களில் இருந்தும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று. இன்று பாராளுமன்ற உறுப்பினரின் முக நூலில் பதிவாகியிருந்த செய்தியில் ஒரு விசேடம் இருந்தது. அதில் சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரித்து, நகர மற்றும் பிரதேச சபைகளாக மாற்றும் நடவடிக்கையை தான் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தமையே அதிலிருந்த விசேடமாகும்.

குறித்த செய்தி இன்று பத்திரிகைகளிலும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதிலிருந்த பா.உ மன்சூரின் விசேட திட்டத்தை யாருமே பெரிதாக தூக்கிப்பிடிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், சம்மாந்துறை மக்களால் சம்மாந்துறை பிரதேச சபையை பிரித்து தரமுயர்த்தும் கோரிக்கை, எப்போது? யாரால்? முன் வைக்கப்பட்டிருந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இப்படியான ஒரு கோரிக்கை சம்மாந்துறை மக்களால் முன் வைக்கப்பட்டதாக நான் அறிந்தில்லை.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் சம்மாந்துறையை இரு சபைகளாக பிரித்து தரமுயர்த்தும் நடவடிக்கையை யாருமே கேட்காமல் செய்து தருவதாக கூறியிருந்தார். அச் சந்தர்ப்பத்தில் அக் கோரிக்கை பலத்த எதிர்ப்பை பெற்றது.சம்மாந்துறை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை பெற்ற இக் கோரிக்கை அதாவுல்லாஹ்வினால் சம்மாந்துறை மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக் கோரிக்கையை அன்று சம்மாந்துறை மக்கள் ஏற்றிருந்தால், இன்று சம்மாந்துறை பிரதேச சபை இரு சபைகளாக பிரிக்கப்பட்டிருக்கலாம். இதனை யாராவது மறுக்க முடியுமா?

இக் கோரிக்கை சம்மாந்துறை மக்களிடம் எடுபடவில்லை என்பதற்கு, அதாவுல்லாஹ் வழங்கிய் வாக்குறுதியை ஏன் செய்ய முடியவில்லை என்று சம்மாந்துறையை சேர்ந்த யாருமே கேள்வி எழுப்பியதில்லை. சம்மாந்துறை மக்களின் கோரிக்கையானது சம்மாந்துறை பிரதேச சபையை பிரிக்காமல் நகர சபையாக தரமுயர்த்துவதாகும். இக் கோரிக்கை இன்று நேற்று முன் வைக்கப்பட்டதல்ல. முன்னாள் மு.காவின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலேயே முன் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாத வகையிலேயே சம்மாந்துறை மக்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இதில் வெளியில் எடுத்த எடுப்பில் கூற முடியாத இன்னும்  சில பாதிப்புக்கள் உள்ளன. அவைகளை தேவைப்படும் நேரத்தில் கூறலாம் என்றுள்ளேன். அல்லாது போனால் இனவாத பட்டத்தை தேவையில்லாமல் கேட்டு வாங்கி விடுவேன். இக் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கைவிட வேண்டும் அல்லாது போனால் எப்போது யாரால் முன் வைக்கப்பட்டதென கூற வேண்டும். இதனூடாக சம்மாந்துறை மக்களின் உண்மையான கோரிக்கைகளை, தாகங்களை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அறியத் தவறி விட்டாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

No comments:

Post a Comment