( ஹபீல் எம்.சுஹைர் )
அமைச்சர் றிஷாதை பற்றி இகழ்வதே சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. இகழ்வது தான் இகழ்கின்றீர்கள், கொஞ்சம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலாவது இகழ மாட்டீர்களா? இன்று மு.கா, மறைந்த மாமனிதர் அஷ்ரபின் நாமம் கொண்டு அரசியல் மாத்திரமே செய்கிறது. அவரின் கொள்கைகளோ மரித்துவிட்டட்டன. அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்களில் ஒருவரான பூமுதீன், மர்ஹூம் அஷ்ரப் பற்றி எல்லை மீறிய விமர்சனம் ஒன்றை வட்சப் ஒன்றில் செய்துள்ளார். அவரின் விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதனை அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த எவரும் போற்றவுமில்லை. அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாதாரண உறுப்பினர்களில் ஒருவர். அமைச்சர் றிஷாத் இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களின் ஆதரவு கொண்ட ஒருவர். அவர் இவர்கள் அனைவரும் தப்பு செய்யும் போது, அறிக்கை விட்டு கண்டிக்க முடியாது. தேவை என்றால் அவர்களின் தவறுகளை தனிப்பட்ட முறையில் ஒரு சிலரிடம் சுட்டிக்காட்டலாம். இதற்கெல்லாம் அமைச்சர் றிஷாதோ அகில இலங்கை மக்கள் காங்கிரசோ ஒரு போதும் பொறுப்பாகாது.
இச் செய்தியை அமைச்சர் றிஷாதுக்கு சேறு பூசும் வகையில் பரப்பிக்கொண்டிருப்பவர்கள், பூமுதீனை அமைச்சர் றிஷாதின் ஊடக பிரிவை சேர்ந்தவராக குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. பூமுதீன் அமைச்சர் றிஷாதின் ஊடக பிரிவில் கடமையாற்றும் ஒருவரல்ல என்பது இங்கு பிரதானமாக சுட்டிக்காட்டத்தக்கது. ஓ... பூமுதீனின் கூற்றை கூட (பூமுதீன் எல்லாம் உங்களுக்கு ஒரு சாமானா? ), தூக்கிப் பிடித்து விமர்சிக்கும் அளவு, மு.கா போராளிகள் மர்ஹூம் அஷ்ரபின் மீது பற்றுக்கொண்டுள்ளீர்களா..? அஷ்ரபின் மரணத்தை வெடில் சுட்டு கொண்டாடிய தவம் தான், இன்று மு.காவின் மிக முக்கிய உறுப்பினர். இதனை அண்மையில் மு.காவின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவரான சேகு இஸ்ஸதீன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது, எங்கே உங்கள் பற்று? ஆனால், மர்ஹூம் அஷ்ரபோடு உண்மைக்கு உண்மையாக இருத்த மூத்த போராளிகளான ஹசனலி போன்றோர் கட்சிக்கு வெளியே! கட்சிக்குள் இவர்கள் இருவரும் இருந்த போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், ஹசனலியை விமர்சிக்குமளவு கட்சிக்குள் ஜனநாயகம்.
பூமுதீன் கூறியதற்கு கிளம்பி அடிப்பது மர்ஹூம் அஷ்ரப் மீதான பற்றாகது. அவரின் மீதான உங்கள் பற்றை பல விதங்களில் உங்களால் வெளிக்காட்ட முடியும். அவர் வழி காட்டிய பிரகாரம் கட்சியை கொண்டு செல்லல். கட்சியை அழித்து, முஸ்லிம்களை கருவறுக்க, அவரை கொலை செய்ததாக நம்பப்படும் நபர்களை கண்டறிதல். இன்று மு.காவானது அவர் வழி காட்டிய பிரகாரம் செல்லவில்லை. மாறாக, அவர் கேட்டிருந்த “ இக் கட்சி மக்களுக்கு பயனில்லை என்றிருந்தால், அதனை அழித்துவிடு ” என்ற பிராத்தனையின் அடிப்படையில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதுவரை மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம், அஷ்ரபின் மரணம் தொடர்பில் பேசியுள்ளாரா? எப்படி பேசுவார்? தன் தலையில், தானே மண்ணை அள்ளிப் போடும் விதமாகவல்லவா அமைந்துவிடும். ஏன் சில்லறைத்தனமாக பற்றை வெளிக்காட்டாது, இவ்வாறு தரமிக்க வகையில் அஷ்ரப் மீதான பற்றை வெளிக்காட்ட தயங்குகிறீர்கள்?

No comments:
Post a Comment