Monday, February 5, 2018

கட்சிக்காரர்களின் உயிரை பலி கொடுத்து, தனது காரியத்தை சாதிக்கும் மனோ நிலையில் ஹக்கீம்



கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்ற அமைச்சர் ஹக்கீமின் உரையானது வன்முறைகளை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இடையில் கட்சியைப் பாதுகாக்க, போராளிகள் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளதாக கூறி, கட்சிக்காரர்களை அதீத  உணர்ச்சியும் ஊட்டி இருந்தார். அமைச்சர் ஹக்கீம் கல்முனை மாநகர சபை தேர்தலை நடாத்தாமல் பிற்போட முயற்சிப்பதாக சில தகவல்கள் உள்ளன. அந்த நகர்வுக்கு சாய்ந்தமருதில் ஒரு பெரிய வன்முறை சம்பவம் அமைச்சர் ஹக்கீமுக்கு அவசியம். அதனை மையாமாக கொண்ட பேச்சாகவே, அதனை பார்க்க முடிவதாக பலராலும் பேசப்படுகிறது.

இவ்வாறு சிந்திக்க சில நியாயமான காரணங்களும் உள்ளன. அமைச்சர் ஹக்கீமின் பேச்சுக்கள் அனைத்தும் மிகவும் நிதானமாக அமையும். இது அனைவரும் அறிந்த விடயங்களில் ஒன்று. சாய்ந்தமருது களநிலவரம் என்ன? அங்கு எவ்வாறு, தான் பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயங்களை, அவர் ஏலவே திட்டமிட்டுக்கொண்டே, அங்கு வந்திருப்பார். சாய்ந்தமருது நிலவரம் அவர் ஏலவே அறிந்தது தான். அங்கு வந்து வன்முறைகளை இன்னும் அதிகரிக்கும் வகையில் பேசியுள்ளமையாமையானது, ஏதோ ஒன்றை சாதிக்கும் நோக்கில் தான் என்பதை யூகித்துக்கொள்ள முடிகிறது. அது வேறு எதற்காக இருக்க முடியும்?

குறித்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் கல் வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. அதாவது முன்னரே அவர்களும் தயாராகவே சென்றுள்ளனர். இவைகளையும் அமைச்சர் ஹக்கீமின் உரைகளையும் தொடர்புபடுத்தி பார்க்கின்ற போது, அவர் நன்கு திட்டமிட்டே வன் முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். தனது கட்சிக்காரர்களின்  உயிர், உடமைகள் அமைச்சர் ஹக்கீமுக்கு அரசியல் விளையாட்டுப்பொருட்கள். 

மர்ஹூம் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்த காலத்தில், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு மத்தியில் கட்சியை வளர்த்திருந்தார். அப்போது முஸ்லிம்கள் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. மாறாக, முஸ்லிம்களே முஸ்லிம்களுக்குள்  அடித்துக்கொண்டு, உயிரை போக்கிக்கொள்வதற்காகவல்ல. அதுவும் மு.காவின் அசைக்க முடியாத கோட்டையான சாய்ந்தமருதில், மு.கா கட்சி மீது நம்பிக்கை இழந்தல்ல. இதனை மு.கா கட்சிக்காரர்கள் நன்கு சிந்தித்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் ஹக்கீமின் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களுக்கு அடிபணிந்து, வன்முறைகளில் ஈடுபட்டு, தங்களது வாழ்வை அழித்துக்கொள்வதற்காகவல்ல.

அஹமட் சாஜித்
மாவடிப்பள்ளி

No comments:

Post a Comment